அர்ஜுனா மலையேற்றம் – பௌர்ணமி நிலவு கலந்துரையாடல்
16.4.2014
திருப்பூர் இயற்கை கழகத்தின் பௌர்ணமி நிலவில் கானுலா ,விசயமங்கலம் அருகே உள்ள அர்ஜுனாமலையில் நடத்த திட்டமிட்டு, பதிமூன்று பேர் கொண்ட குழு மாலை 4.30 க்கு மலையின் அடிவாரத்தை சென்றடைந்தது. வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு மெல்ல மலை ஏறத் துவங்கினோம் .
பாறை கற்களும், முட் புதர்களும் நிறைந்த மிகவும் வறட்சியாக காட்சியளிக்கும் அர்ஜுனாமலையில் நாங்கள் பல முறை ஏறியுள்ளோம் .இப்போது தான் முதல் முறையாக பௌர்ணமியின் இரவு நேர அறிவியல் கலந்துரையாடலில் சங்கமிக்க உள்ளதை நினைத்துப் பூரிப்புடன் புறப்பட்டு , எங்களுக்கான இரவு உணவு.. ,குடிநீர், பழங்களை எடுத்துக்கொண்டு பயணத்தை துவங்கினோம் .
நறநறக்கும் கற்களின் சப்தத்தோடு சரிவான பாதையில் துவங்கிய எங்கள் பயணம், காட்டுப் பறவைகளின் கீச்சுக் குரலையும் ,கெளதாரிகளின் தூரத்து சப்தங்களையும் ரசித்தவாறு இயற்கையின் பல்வேறு பரிணாமங்களை பற்றிய தரவுகளை விவாதித்துக்கொண்டே மெல்ல மெல்ல மேலேறியது .அதிக பளு மற்றும் போதிய பழக்கமின்மை காரணமாக ஆங்காங்கே அமர்ந்து தான் சென்றோம் .அப்படி அமரும் போது, பாறைக் கற்களின் வெப்பம், அன்றைய ஆதவனின் தாக்கத்தை உணர்த்தியது. கோடையின் உக்கிரத்தை உணர்ந்தவாறு மலையின் உயரமான பகுதியை நோக்கி செல்லச் செல்ல உடலும், மனதும் உற்சாகத்தின் மிகுதியால் வியர்வை கண்ணீர் வடித்தது .கிட்டத்தட்ட ஒரு மணிநேர மலை ஏற்றத்திற்குப் பிறகு மலையின் உச்சியை சென்றடைந்தது காணக் கிடைக்காத மகிழ்ச்சி .
மேலே உளவாரன் மற்றும் தகைவிலான்களின் பூச்சி வேட்டையை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தோம் .மெல்ல இருள் கவியத் துவங்கியதையும்,அதனால் இரவாடிப் பறவைகளின் வருகையும் எங்களிடையே மகிழ்ச்சியை கொடுத்தது .அதற்குள் பௌர்ணமி நிலவின் ஒளி இரவின் நிசப்தத்தை விரட்டியது .
எங்களது நிர்வாக உறுப்பினர் தோழர் கோபால் அவர்கள் பருவ மழை மற்றும் ஆண்டு மழை பொழிவு பற்றிய அறிவியல் தரவுகளை எங்களிடம் பகிர்ந்தது பயனுள்ளதாக இருந்தது .மேலும் ஆண்டு சராசரி மழை பொழிவு இந்தியாவிற்கு மட்டும் 750mm முதல் 1300mm வரை பொழிவதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை குறுக்கே தடுப்பதால்,கேரளம் மற்றும் கொங்கனில் அதிக மழை பொழிவதாகவும் கூறினார் .மேலும் சகாரா பாலைவனம் நமக்கு தேவை என்றும் ,சீரான தட்பவெப்பத்திற்க்கும் சுற்றுச் சூழலியலில் சமன்பாட்டிற்கும் ஆன இயற்கையின் நிலைப்பாடு அது என்றார் .தென் மேற்கு பருவ மழையே நமது நாட்டின் நிதி அமைச்சகம் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூரியதை நினைவு படுத்தினார் .மேலும் கோள்கள் பற்றியும் அண்டவெளி பற்றியும், செயலாளர் ரவீந்தரனின் கேள்விகளிற்கும் இடையிடையே பதில் கூறிக் கொண்டே இரவு உணவை முடித்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .நிலாச்சோறு…அனைவரும் மங்கிய வெளிச்சத்தில் அமர்ந்து உணவருந்தியது அருமை .
நிறைவாக தலைவர் அவர்கள் புதிய தோழர்களிடம் வன உயிரினங்கள் பற்றியும் அவற்றின் இடையுறுகளுக்கு நாம் எவ்வாறு காரணகர்த்தா ஆகிறோம் என்பது பற்றியும் கூறினார் .அதிகமான ஆர்வம் வனத்திற்குள் கூடாது என்றும் ,நாம் வனவிலங்கு பாதுகாப்புக்காக செயல் படுத்த வேண்டிய காரியங்கள் காடுகளில் இல்லை நகரத்தில் தான் உள்ளது என்றும் ,நாம் தேவையில்லாமல் வனத்திற்குள் நுழைந்து வனவிலங்குகளால் இடையூறு ஏற்ப்பட்டுவிட்டது என்று கூறுவது கூட நமக்காக நன்மை பயக்கும் அந்த வனச்செல்வங்களை அவமானப்படுத்துவது போன்றதாகும் என்ற அருமையான கருத்தை பதிவு செய்தார் .மேலும் நமது இயக்கத்து செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் .பின்னர் அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு மெல்ல கீழே இறங்க ஆரம்பித்தோம்.
அந்த அற்புதமான நிலவொளியில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த மற்றும் கற்களும் பாறைகளும் நிறைந்த வழியில் கீழிறங்கியது தனி அனுபவம் .அனைவரும் கீழே வரும் வரை பேச்சும் விளக்கமுமாக வரும்போது … திடீரென ஒரு இனிமையான சப்தம் .ஆம் நமது அரளிப்பூ ஆள்க்காட்டியின் இரவு நேர இருப்பு பற்றிய அறிவிப்பு அது என்றெண்ணி…கால்களின் நடுக்கத்தை சமாளித்தவாறு சமதளத்தை வந்தடைந்தோம் .அங்கே எங்களுக்காக வன அலுவலர் மற்றும் உள்ளூர் மக்கள் காத்திருந்தனர் .அவர்களிடம் நாங்கள் சென்ற நோக்கம் பற்றியும் இயற்கை , பறவைகள் ,மற்றும் குளம், குட்டைகள் வளம் பற்றியும் எடுத்துரைத்து அதன் தேவை பற்றிய விளக்கம் கொண்ட துண்டு சீட்டை கொடுத்து விட்டு இரவு 10.30மணிக்கு எங்கள் பயணத்தை நிறைவு செய்தோம் .
கலந்து கொண்ட நண்பர்கள் : செந்தில் ராஜன் , ரவீந்திரன், மெய் ஞான மூர்த்தி , விஸ்வநாதன் , கோபாலகிருஷ்ணன் , நல்லசிவன், ராம்குமார் , துரை , பொன்னுசாமி , முருகவேல் , காளீஸ்வரன் , ஹரிஷ்
Leave a Reply