பாறை கற்களும், முட் புதர்களும் நிறைந்த மிகவும் வறட்சியாக காட்சியளிக்கும் அர்ஜுனாமலையில் நாங்கள் பல முறை ஏறியுள்ளோம் .இப்போது தான் முதல் முறையாக பௌர்ணமியின் இரவு நேர அறிவியல் கலந்துரையாடலில் சங்கமிக்க உள்ளதை நினைத்துப் பூரிப்புடன் புறப்பட்டு , எங்களுக்கான இரவு உணவு.. ,குடிநீர், பழங்களை எடுத்துக்கொண்டு பயணத்தை துவங்கினோம் .
நறநறக்கும் கற்களின் சப்தத்தோடு சரிவான பாதையில் துவங்கிய எங்கள் பயணம், காட்டுப் பறவைகளின் கீச்சுக் குரலையும் ,கெளதாரிகளின் தூரத்து சப்தங்களையும் ரசித்தவாறு இயற்கையின் பல்வேறு பரிணாமங்களை பற்றிய தரவுகளை விவாதித்துக்கொண்டே மெல்ல மெல்ல மேலேறியது .அதிக பளு மற்றும் போதிய பழக்கமின்மை காரணமாக ஆங்காங்கே அமர்ந்து தான் சென்றோம் .அப்படி அமரும் போது, பாறைக் கற்களின் வெப்பம், அன்றைய ஆதவனின் தாக்கத்தை உணர்த்தியது. கோடையின் உக்கிரத்தை உணர்ந்தவாறு மலையின் உயரமான பகுதியை நோக்கி செல்லச் செல்ல உடலும், மனதும் உற்சாகத்தின் மிகுதியால் வியர்வை கண்ணீர் வடித்தது .கிட்டத்தட்ட ஒரு மணிநேர மலை ஏற்றத்திற்குப் பிறகு மலையின் உச்சியை சென்றடைந்தது காணக் கிடைக்காத மகிழ்ச்சி .
மேலே உளவாரன் மற்றும் தகைவிலான்களின் பூச்சி வேட்டையை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தோம் .மெல்ல இருள் கவியத் துவங்கியதையும்,அதனால் இரவாடிப் பறவைகளின் வருகையும் எங்களிடையே மகிழ்ச்சியை கொடுத்தது .அதற்குள் பௌர்ணமி நிலவின் ஒளி இரவின் நிசப்தத்தை விரட்டியது .