கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16.02.2014 ) அன்று நமது திருப்பூர் இயற்கை கழக நண்பர்கள் குழு, செயலாளரின் வேண்டுகோளின் படி மாபெரும் பறவை கணக்கு பதிவிற்காக ( NILGIRIS BIG BIRD DAY ) வன ஆர்வலரும் முதுபெரும் கானுயிர் புகைப்பட கலைஞருமான நஞ்சன் தருமன் அவர்களின் குழுவுடன் சேர்ந்து பணியாற்றியது.
குழு நண்பர்கள் : கோபாலகிருஷ்ணன், நல்லசிவன், செந்தில், ராஜ்குமார், பாலக்ருஷ்ணன், லதீஷ் ,முருகவேல், காளீஸ்வரன் மற்றும் ஹரிஷ்.
காலை 6.40 மணிக்கு நமது குழு குஞ்சப்பனை வன எல்லையை அடைந்தது. சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு ஒரு காரில் கிட்டத்தட்ட ஆங்கில படத்தில் வருவது போன்ற கௌபாய் கெட்டப்பில் அவர் எளிமையாக இறங்கி வந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது .அழகிய தமிழில் எங்களை உற்சாகத்தோடு வரவேற்றார் .அவரோடு கல்லூரி மாணவ,மாணவியர் 10 பேர்,கோத்தகிரி பெண் டாக்டர் ,அவருடைய மகள் ,பூபதி, அவருடைய பேரன் உட்பட கிட்டத்தட்ட பெருங்குழு ஒன்று கனகத்திற்குள் பயணப்பட்டது .
பறவைகளின் கீச்சு குரல்களும் காலடியில் நசுங்கி உடையும் காய்ந்த இலைகளின் சப்தமுமாக நாங்கள் கனகத்திற்குள் நுழைந்த உடன் பருத்த மீன் உண்ணும் ஆந்தையை ( Brown Fish Owl ) கண்டு பரவசமடைந்தோம் .பின்னர் சிறிது நேர நடைக்கு பின் எங்களது மௌனத்தை கலைப்பது போன்று மலை அணிலின் ( Malabar Giant Squirrel ) சப்தம் …..உற்சாகமாக இருந்தது .தருமன் அவர்கள் பறவைகளின் சப்தத்தை பதிவு செய்து,தனது கை பேசியில் ஒலிக்க செய்ய… எதிர் திசையில் இருந்து பறவையின் பதில் வந்தது .அந்த காலை நேர ரம்மிய நிகழ்வு நெஞ்சில் நிற்கிறது .குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்ற குதூகலத்துடன் எங்களை வழி நடத்திச் சென்றது மகிழ்ச்சியளித்தது .
காலை நேர உணவு டாக்டர் அவர்கள் ஏற்ப்பாடு செய்திருந்தார்கள் .மிகவும் அன்போடு அசத்தலான விருந்து ஒன்றை நாங்கள் கௌரவித்தோம் . ஒவ்வொரு இடத்திலும் இன்ன பறவை பார்க்க முடியும் என்று உறுதியாக சொல்லி அசத்தினார் நஞ்சன் ..உணவிற்கு பின்னர் கானுலா சென்று பல பறவையினங்களை பார்த்தோம் .குறிப்பாக பாம்பு தின்னும் கழுகை ( Crested Serpent Eagle ) அருகில் பார்த்தோம்.
மேலும் பல பறவையினங்களை பார்த்து பதிவு செய்து விட்டு 11 மணியளவில் திருப்பூருக்கு திரும்ப எத்தனித்தோம். நஞ்சன் தருமன் அவர்கள் எங்களை வண்டி நிறுத்துமிடத்திற்கே வந்து வழியனுப்பினார். அவரிடம் நாங்கள் ரசித்தது .. மிகுந்த பொறுமை, ஒரு பறவைக்காக நீண்ட நேரம் காத்திருத்தல், அன்பான வழிநடத்தல் ,சப்தங்களை கூர்ந்து கேட்பது ,மிகவும் அமைதியாக சலனமில்லாமல் அமர்ந்திருப்பது ,காட்டின் வழித்தடத்தை உன்னிப்பாக கவனத்தில் கொள்வது போன்றவற்றை கற்றுக்கொண்டோம் .
Leave a Reply